கோடை விடுமுறை- சிறப்பு ரயில்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்கும் செல்ல தொடங்கியுள்ளனர். அதே நேரம் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளதால் சிறப்பு ரயில் அறிவிக்கப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, போதனூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
எழும்பூர்- கன்னியாகுமரி சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் மதியம் 1.00 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் மே 3 ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் எழும்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை,நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- தென்காசி சிறப்பு ரயில்
தாம்பரம் – தென்காசி/செங்கோட்டை இடையே (ரயில் 06089/06090) எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில்களும் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (30 ஏப்ரல் 2026) இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10.00 மணிக்கு தென்காசியை சென்றடையும் எனவும் மறுமார்க்கத்தில் மே 3ஆம் தேதி அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை,ராஜபாளையம் வழியாக தென்காசியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
ஈரோடு – சென்னை சென்ட்ரல் – போதனூர்
ஈரோடு – சென்னை சென்ட்ரல் – போதனூர் இடையே சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06026/06025) இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.20 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில், மாலை 5.00 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். அதே நாளில் மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 5.15 மணிக்கு போதனூரை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், போதனூர் – சென்னை சென்ட்ரல் இடையே (ரயில் எண் 06028/06027) சிறப்பு ரயில்கள் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருப்பதாகவும், அதில் போதனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் ரயில், அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு போதனூரை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் போதனூர்,திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு எப்போது தொடங்கும்.?
இந்த அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 06026/06025 ரயில்களுக்கு முன்பதிவு நேற்றைய தினம் தொடங்கியுள்ளது. மற்ற ரயில்களுக்கு முன்பதிவு 30 ஏப்ரல் காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
