சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் ஜெயின். இவர் ஐஐடி சென்னையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்தார். இவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


இவரின் மரணத்துக்குப் பின்னால் மெக்கானிக்கல் துறை பேராசிரியரும் சச்சினின் பிஎச்.டி. மேற்பார்வையாளருமான ஆஷிஷ் குமார் சென் இருப்பதாக சக மாணவர்கள் போர்க்கொடி தூக்கினர். சச்சினின் சகோதரர் பவேஷ் ஜெயின் 6 பக்க அளவிலான புகார் கடிதத்தை ஐஐடி சென்னை நிர்வாகத்திடம் அளித்தார்.


ஆஷிஷ் குமார் சென் இடை நீக்கம்


இதைத் தொடர்ந்து முன்னாள் டிஜிபி திலகவதி தலைமையில் 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில், பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் மீதான் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், ஆஷிஷ் குமார் சென் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஐஐடி சென்னை ஊழியர் கூறும்போது, 2 மாதங்களுக்கு முன்பே விசாரணைக் குழுவின், 700 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 34 பரிந்துரைகளும் அளிக்கப்பட்டது. அதில் முக்கியமான பரிந்துரையாக சென் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.


இதை அடுத்து ஆஷிஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சச்சின் மட்டுமல்லாது, வேறு பல மாணவர்களையும் மனிதாபமற்ற முறையில், ஆஷிஷ் சென் நடத்தியதாகப் புகார் எழுந்தது.


மாணவர் சங்கம் வரவேற்பு


சென் இடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஐஐடி சென்னை மாணவர் சங்கம், விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, சச்சினின் தற்கொலைக்கு, பேராசிரியர் சென் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து ஐஐடி சென்னை, தங்கள் ஊழியர் மீதே எடுத்துள்ள தைரியமான நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)