தமிழக-கேரள மக்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்ட நிலையில் தமிழக போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்தி மரியாதை கொடுக்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது மரபு. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற அக்டோபர் 6ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டி முன்னுதித்த நங்கை அம்மனுக்கு தினமும் நடைபெறும் நித்தியகாரிய பூஜைகள் முடிந்த பிறகு தட்டு வாகனத்தில் நேற்று காலை 8.15 மணியளவில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா வந்து ஊர்வலமாக புறப்பட்டது. ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று மதியம் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைந்தது.
ஆண்டுதோறும் சாமி சிலை ஊர்வலம் நடைபெறும் போது வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் சாத்தி, தீபாராதனை, பூஜைகள் செய்து வழிபடுவார்கள். ஆனால் நேற்று கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சாமி சிலைக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் பூஜைகள் நடத்த அனுமதிக்கவில்லை. ஊர்வலத்தின் போது பாரம்பரிய முறைப்படி உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை கேரள அறநிலையத்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், கல்வித்துறை மந்திரி சிவன் குட்டி, தொல்லியல் துறை மந்திரி அகமது தேவர் கோவில், மத்திய மந்திரி முரளிதரன், தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு தட்டு வாகனங்களில் புறப்பட்டு செல்கிறது.
சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், திருவனந்தபுரம் தேவசம் துணை ஆணையர் மது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்க ராமன், குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, கல்குளம் தாசில்தார் பாண்டியம்மாள், சுவாமி பத்மேந்திரா, முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான சுரேஷ் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தாமரை பாரதி, வட்ட செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் ஊர் தலைவர்கள், இந்து இயக்கத்தினர், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.