மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
"செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது."

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற குடும்பத் தகராறு, வன்முறையாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி மாலா (50) மற்றும் மகன் கேப்டன் பிரபாகரன் (25).
இவர்களுக்கு இடையே நேற்று இரவு 10 மணியளவில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பூஞ்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள மரகதப் பூங்கா பகுதியில் இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மகன் பிரபாகரன், கத்தியால் தனது தாயான மாலாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மாலாவின் இடது கை மணிக்கட்டில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் மகன் காயம்
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இரவு 11 மணியளவில் அதே பகுதியில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. தனது மனைவியைக் கத்தியால் வெட்டிய ஆத்திரத்தில் இருந்த தந்தை சேகர், தனது மகனான பிரபாகரனை நாட்டுத் துப்பாக்கியால் (Iron Balls) சுட்டுள்ளார். இதில் பிரபாகரனின் இடது கால் முட்டிக்குக் கீழே பலத்த காயமேற்பட்டது.
காவல்துறையினர் தீவிர விசாரணை
காயமடைந்த தாய் மற்றும் மகன் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறு காரணமாகத் தாய், மகன், தந்தை என மூவரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















