சென்னையில் இன்று காலை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அவரும் பங்கேற்றார். அதிகாலை 4.30 மணிக்கு தனது மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிய அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் தனது ஓட்டத்தை நிறைவு செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு 10 நாட்கள் கழித்து, உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற அடிப்படையில் தினந்தோறும் 10 கிலோமீட்டர் தொலைவு நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை தொடர்ச்சியாக வைத்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுப்பணியை கூடுதலாக கவனிக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால், 20 நாட்களாக எந்த பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தேன். தற்போது கடந்த 10 நாட்களாக மீண்டும் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன்.




எங்கே சென்றாலும் அதிகாலையில் எழுந்து 10 கிலோ மீட்டர் ஓடுவேன். அந்த பயிற்சியில் இருந்ததால் இந்த மாரத்தான் சாத்தியமானது. கடந்த தி.மு.க. ஆட்சிகளில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிறைய மாரத்தான் போட்டிகளை அப்போதைய விளையாட்டுத்துறை சார்பில் தமிழக அரசே முன்னின்று நடத்தியது. அதற்கு அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இதை தொடர தவறிவிட்டனர்.


குறிப்பாக சென்னையில் மாரத்தான் போட்டிகளை நடத்துவதற்கு ஏராளமான இடையூறுகள் இருந்தது.  இளைஞர்கள் மேல் அக்கறை கொண்ட அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். டெங்கு பாதிப்பு 2 ஆயிரம் என்பது ஒரே மாதத்தில் ஏற்படவில்லை. கடந்த ஆறேழு மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாதத்திற்கு 40, 50 என்று பாதிக்கப்பட்டுள்ளார்கள்.




உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேவையில்லாமல் உள்ள கழிவுநீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ளச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். முதல்வரின் உத்தரவின்படி, கொசுமருந்து தெளிப்பது, கொசுமருந்து புகை அடிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள நீர் நிலைகளில் ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வரும் சூழலில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றுதான் 3 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருவது சுகாதாரத்துறையினருக்கு சவாலான பணியாக அமைந்துள்ளது.