சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மேலும் ஐந்து ஆண்டுகளுகள் இயங்குவதற்கு தடை இல்லை என NMC நிறுவனம் மருத்துவ குழு அறிக்கை அனுப்பியுள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார் அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “மத்திய அரசால் கடந்த மாதம் மருத்துவ இடங்களுக்கு பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு ஒரு வரைவு அனுப்பப்பட்டது.  உடனடியாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி அவரின் அறிவுறுத்தலின் பேரில் துறையின் செயலாளர் மூலம் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை மருத்துவம் தொடர்பான கொள்கைகளில் அதன் மீது சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமை சார்ந்தது. மாநில அரசுகளே  கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம் என  இன்றைக்கு மத்திய அரசு நமக்கு  கடிதம் அனுப்பியுள்ளது” என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “ தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்து அதில் சிசிடிவி கேமரா பயோமெட்ரிக் என்கின்ற வகையில் சிறிய குறைபாடுகள் இருப்பதாக சொல்லி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி திருச்சி மருத்துவக் கல்லூரி தர்மபுரி மருத்துவ கல்லூரி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை அனுப்பியுள்ளது. உடனடியாக மருத்துவத்துறையினரிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி மருத்துவத்துறை  குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்து என் எம் சி குழுவிடம் விளக்கம்  தரப்பட்டது. அவர்கள் சொன்ன சிசிடிவி கேமரா மற்றும் பயோ மெட்ரிக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் என் எம் சி குழு மருத்துவ கல்லூரிகளில் நேரடி கள ஆய்வு, காணொளி மூலம் ஆய்வு நடத்தி ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் அளித்த அறிக்கையை திரும்ப பெற்றுள்ளனர்.  மேலும் ஐந்து ஆண்டுகள் மருத்துவகல்லூரி   இயங்குவதற்கு தடை இல்லை என அறிக்கை அனுப்பி உள்ளனர். திருச்சி மருத்துவக் கல்லூரியில் நாளை காணொளி வாயிலாக ஆய்வு நடத்தப்பட உள்ளது அது முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்துவிடும். பத்திரிகை ஊடகத்துறையிலும் அரசியல் தலைவர்களும் மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டது போல பிரம்மாண்ட மாயை உருவாக்கி வந்தனர். தர்மபுரி மருத்துவ கல்லூரியும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியும் இயங்குவதற்கு தடை இல்லை என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.


மேலும், “ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக ஆர் சி எச் என்ற அடிப்படையில் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர். குழந்தைகள் நல பணியாளர்கள் என்கின்ற பெயரோடு ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப பணியார்த்தப்பட்டனர்.  அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிச் முறை என்ற அடிப்படையில் 1500 ரூபாய் சம்பளத்திற்கு 2000 வரை பணி நிமித்தம் செய்துகொண்டானர் தமிழகம் முழுவதும் அந்த பணியாளர்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் எங்களுக்கு அளித்து வந்தனர்.  878 மருத்துவ பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 878 பணியிடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு ஆர் சி எச் அடிப்படையான இந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இப்படி அவர்கள் பணியில் அமர்த்தப்படும் போது இனிமேல் அவர்களுக்கு மாதத்திற்கு 15000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் 10 மடங்கு சம்பள உயர்வு என்பது முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.