தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, பிரதமர் மோடியையும் தனியாக சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் ஸ்டாலின். அது குறித்து பார்க்கலாம்.
ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்த இபிஎஸ் விமர்சனம்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, பல்வேறு திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை என்ற குற்றம்சாட்டை சொல்லி, கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்ததாக விமர்சித்தார்.
3 ஆண்டு கால புறக்கணிப்பிற்குப் பின், நேற்று டெல்லியில் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தன்னுடை கருத்தை தெரிவித்துள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஏன் கலந்துகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, கடந்த ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி கிடைத்திருக்கலாம், புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம், பிரச்னைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம் என்று கூறினார். மேலும், இதிலிருந்தே, மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர் இவர் என்பது தெரியவருவதாக விமர்சித்தார்.
அமலாக்த்துறையால் ரெய்டு நடைபெற்று, விசாரணையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதனால், ரெய்டுக்கு பயந்தே ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கருத வேண்டியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர், தற்போது பிரச்னை வந்துவிட்டதால், பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“எனது டெல்லி பயணம் அரசியல் எதிரிகளின் வயிற்றில் புளியை கரைத்தது“
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டெல்லிக்கு செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்று உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல் வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்த்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் ஏதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் மோடிய சந்திக்க முதலமைச்சர் செல்கிறார் என்றும், வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார் என்றும் கற்பனை சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள் என்றும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“
இக்கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்துள்ள ஸ்ட்லின், குடும்பச் சொந்தகங்கள் மீதும், வியாபாரக் கூட்டாளிகள் மீதும் தமிழ்நாட்டிலும், கர்நாகடம் உள்ளிட்ட மாநிலங்களிலும், மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்று, அங்கு ஊடகங்கள் சூழ்ந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை பார்க்கப் போகிறேன் என்று பம்மாத்து செய்து, நான்கு கார்கள் மாறி மாறி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்து, தன்னையும், தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் அடையாளமான கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்து, கூட்டணி அமைத்தவர், என்னுடைய டெல்லி பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை ரசித்தபடியே டெல்லிக்கு புறப்பட்டேன் என கடிதத்தில் நறுக்கென்று பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.
மேலும், மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம், நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது என்றும், நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை திமுக-வினரை குறி வைத்ததுபோல், இந்தியாவில் வேறு எந்த கட்சியையும் குறிவைத்ததில்லை என்றும், அவற்றை சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை என்றும் கடிதத்தில் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எத்தனை முறை விளக்கமளித்தாலும், எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள், திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.