நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 37 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மத்திய அரசையும் மற்றும் மாநில அரசையும் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்தச் சிறைபிடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை நாள்தோறும் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து வருவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடந்த 14 ந்தேதி கைது செய்யப்பட்ட  27 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இதில் தொடர் போராட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நேற்று மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.


இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் ஆய்வு கப்பல் என்ற பெயரில் சீன உளவு  கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, நேற்று மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புல் ஈடுபட்டனர்.




அதில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மூன்று படகும் அதிலிருந்த 23 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.


மேலும், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 2 படகு  அதிலிருந்து 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.


கடந்த 14ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளும் அதிலிருந்து 64 மீனவர்கள் இலங்கை கடற்படை  கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மீன்களுக்கும் மீனவர்களுக்கும் கடலில் எல்லை இல்லை என கூறிவரும் நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து மீனவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில்  மவுனம் காக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.


மேலும், தற்போது பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கைக்கு அவ்வப்போது பொருளாதார ரீதியாகவும் அண்டை நாடு என்ற முறையிலும் இந்திய அரசு பல்வேறு வகையில் உதவி செய்து வரும் நிலையில், தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.