தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது:


தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. காங்கேசன் - பருத்தித் துறைக்கு இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் அவர்களுடன் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.


முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:


சமீபத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இது தொடர்பாக, கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து வழங்கினார். 


தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவதை நிறுத்திடவும் கைது செய்யப்படுள்ள மீனவர்களை உடனடியான விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை திரும்ப வழங்கிவும் வலியுறுத்தியும் மத்திய வெளியுறுவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தப் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை என்றும் வலியுறுத்தியிருந்தார்.


இந்தச் சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "மீனவர்வர்கள் பிரச்னை குறித்து முதலமைச்சரின் கடிதம் தங்களது துறைக்கு வந்துவிட்டதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்திருக்கிறார். 


இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற காரணத்தினால் கைப்பற்றப்பட்ட 12 படகுகள், தொடர்ந்து கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள். 23 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அங்கே இருக்கும் வழக்கறிஞரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறோம் என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.


இது தொடர் நடவடிக்கையாக இல்லாமல் இந்த கைது நடவடிக்கை மீண்டும் நீடித்து விடாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே, அமைச்சர் அவர்கள் உரிய கரிசனத்தோடு இந்தப் பிரச்னையை அணுகுவதாக அறிகிறேன். 


தொடர்ந்து நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு, மீனவர்களுடைய நலன் காக்கின்ற தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதைத்தவிர 9 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று அங்கே இருக்கின்ற நீதிமன்றம் பல மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் சொல்லியும் அறிவுறுத்தியும் அந்த படகுகள் இன்னும் விடுவிக்கப்பட வில்லை என்று மீனவர்கள் முறையிட்டார்கள் அது குறித்து விசாரிப்பதாகவும், உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்  முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்கள்” என்றார்.