எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 இன்று இலங்கை கடறபடையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராமேஸ்வரம், நாகை உள்ளிட்ட கடல் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் பின்னர் தமிழக அரசு பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இதற்கு மட்டும் இன்னும் மத்திய அரசு தீர்வு காணாமல் திணறி வருகிறது. 


 


இந்நிலையில் வழக்கம்போல் நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி பிடித்ததாக கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் நகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது.  


கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை அதிபர் திசநயகவுடன் சந்திப்பு நடத்தினார். இந்தியா வந்த இலங்கை அதிபர் பொருளாதார நெருக்கடியின்போது உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.  அப்போது அவரிடம் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். 


 


இதுகுறித்து அப்போது பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக கூறுகையில், “இலங்கை படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தீர்வு காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். மீனவர்கள் பிரச்சினை இருநாடுகளுக்கும் தலைவலியாகிவிட்டது. 


தமிழக மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும். இரட்டை மடி வலை பயன்படுத்துவது மீன்பிடித் தொழிலுக்கு பேரழிவு” எனத் தெரிவித்தார். இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அதிபருடன் பேசி வருகிறோம் எனவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.