வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகனுக்குச் சிறப்பு பூஜை – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!
"காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி கிருத்திகை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது."

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். இங்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் சனிக்கிழமையன்று மிக விமரிசையாக நடைபெற்றன.
ஆலயத்தின் ஆன்மீகப் பெருமைகளும் நம்பிக்கைகளும்
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. அந்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிவபெருமான் நக்ஷத்திரக் கூட்டங்களாக விளங்கும் வரமளித்ததால், மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகனை வழிபடுவது சிறப்பானது என்பது ஐதீகம்.
மேலும், இத்தலத்தில் கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்து வழிபட்டால் புதிய வீடு, திருமணம், பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. புராண காலத்தில் பகீரத மன்னன் இங்கு வழிபட்டுத் தனது இழந்த ராஜ்யத்தை மீட்டான் என்றும், தேவர்களின் தலைவன் இந்திரன் இங்கு பூஜித்து இந்திராணியை மணந்தான் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இக்கோயிலுக்குத் தொடர்ந்து 7 வாரங்கள் வந்து மாலை சாற்றி வழிபடுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
சந்தனக்காப்பு மற்றும் ராஜ அலங்காரம்
வைகாசி மாத கிருத்திகையும் அமாவாசையும் ஒரே நாளில் இணைந்து வந்ததால், சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கே கோயில் சந்நிதி திறக்கப்பட்டு, மூலவர் முன்பு 'கோ பூஜை' நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வெற்றிலை மற்றும் சாமந்தி மலர்மாலைகள் சாற்றப்பட்டு, மனமகிழும் வண்ணம் 'சந்தனக்காப்பு' அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். பின்னர் 16 விதமான தீபாராதனைகளுடன் மகா பூஜை நடைபெற்றது. அதேபோல், உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 5 மணிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரோஜா, சாமந்தி, கதிர்பச்சை மலர்மாலைகள் மற்றும் பட்டு அங்கி அணிவிக்கப்பட்டு கம்பீரமான 'ராஜ அலங்காரத்தில்' சுவாமி அருள் பாலித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
இந்த விசேஷ நன்னாளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, "அரோகரா" கோஷ முழக்கங்களுடன் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.
சிறப்பு வசதிகளும் நிர்வாக ஏற்பாடுகளும்
தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் வெயிலின் தாக்கமின்றி செல்ல ஏதுவாக உட்பிரகாரத்திலும் வரிசைகளிலும் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சாதாரண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும், விரைவு தரிசனத்தில் சென்றவர்கள் 30 நிமிடங்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் தடையின்றி வழங்கப்பட்டன. மேலும் அவசரத் தேவைக்காக இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதற்கான விரிவான அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் சி. குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா. செந்தில்தேவ்ராஜ் மற்றும் அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்





















