திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் 10-ம் தேதி விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10-ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில்
திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஏராளம். அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில், அதிக அளவிலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், ஜூன் 10-ம் தேதி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் இயக்கப்படு நேரம் என்ன.?
தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பின்படி, வரும் 10-ம் தேதி, பவுர்ணமி கிரிவலத்திற்காக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கும், அதேபோல் மறுமார்க்கத்திலும், 8 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து ஜூன் 10-ம் தேதி காலை 9.25 மணிக்கு, விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06130) புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மறு மார்க்கத்தில், அதே நாள் பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06129) புறப்படும்.
இந்த ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.?
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்புகள் என்ன.?
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில், பவுர்ணமி, பிரதோஷ திணங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
அங்குள்ள கிரிவலப் பாதையின் மொத்த தூரம் 14 கிலோ மீட்டர்களாகும். இது இந்து புராணங்களில் உள்ள 14 லோகங்களின் அடையாளமாக கருதப்படுகிறது.
பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது, சந்திரனின் அருளை பெற்றுத் தருவதாக ஐதீகம். அதேபோல், ஒவ்வொரு கிரிவலமும் விசேஷம் என்றாலும், மாசி மாத கிரிவலம் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், மாசி மாதம் சிவ வழிபாட்டுக்கு உரிய மாதமாகும்.
பவுர்ணமி கிரிவலம், மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியையும் கொடுக்கிறது.
