தை மாத பௌர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் என்பது அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள அருணாசல மலையை வலம் வருவதாகும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று தமிழகத்தில் பல மாவடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் கிரிவலத்தில் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் தை மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அந்த வகையில் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பௌர்ணமி கிரிவலம் நிகழ்வை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதல் பயணிகள் வருகையை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.விழுப்புரம் – திருவண்ணாமலை – விழுப்புரம் வழித்தடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறியுள்ளது. இந்த சிறப்பு சேவைகள் பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06130) பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்திற்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06129) பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 2.15 மணிக்கு விழுப்புரம் நிலையத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
8 MEMU பெட்டிகளுடன் சிறப்பு ரயில்
இந்த சிறப்பு ரயிலில் மொத்தம் 8 MEMU பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும், இந்த சிறப்பு ரயில் பயணிகளின் வசதிக்காக வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், அடிச்சனூர், ஆண்டம்பள்ளம், தண்டரை உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பௌர்ணமி நாளன்று திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ள வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
