Special train Tamil New Year : தமிழ் புத்தாண்டு விடுமுறை.! நெல்லை, தூத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்- முன்பதிவு எப்போது.?
Special train Tamil New Year : தமிழ் புத்தாண்டையொட்டி பொதுமக்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு - சிறப்பு ரயில்
விடுமுறை என்றாலே பொதுமக்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலாவிற்கு புறப்பட மக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், சிறப்பு ரயில் இயக்கப்படுமா.? என எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருந்தனர். அந்த வகையில் கோவை, திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு திருவிழாவையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசலையடுத்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
1. திருநெல்வேலி – சென்னை எக்மோர் (06070/06069)
திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 9 இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எக்மோரில் மறுநாள் காலை 10:45 மணிக்கு வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் ஏப்ரல் 10 அன்று மதியம் 12:30 மணிக்கு புறப்படும்.
நிறுத்தங்கள்: கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்
2. சென்னை சென்ட்ரல் – கொல்லம் (06119/06120)
ஏப்ரல் 15 அன்று பிற்பகல் 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 6:55 மணிக்கு கொல்லம் சென்றடையவுள்ளது.
மறுமார்க்கத்தில் ஏப்ரல் 16 அன்று இயக்கப்படவுள்ளது.
நிறுத்தங்கள்: அரக்கோணம், வேலூர் (காட்பாடி), சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம்
3. சென்னை எக்மோர் – திருவனந்தபுரம் வடக்கு (06115/06116)
ஏப்ரல் 10 அன்று இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மாலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையவுள்ளது.
மறுமார்க்கத்தில் ஏப்ரல் 15 அன்று இயக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தங்கள்: திருவள்ளூர், அரக்கோணம், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, கொல்லம்
4. சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி (06151/06152):
ஏப்ரல் 13 அன்று இரவு 11:50 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 12:15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையவுள்ளது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 14 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நிறுத்தங்கள்: அரக்கோணம், சேலம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி
முன்பதிவு எப்போது தொடங்குகிறது.?
நெல்லை சிறப்பு ரயிலுக்கான (06070) முன்பதிவு ஏப்ரல் 7 அன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும், மற்ற அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு ஏப்ரல் 8 காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























