தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நடப்பாண்டில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த பண்டிகை வரும் நிலையில், அதற்கு மறுநாள் (நவம்பர் 13) ஆம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் வெளியூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் எளிதாக தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவது என கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தயாராகி வருகிறார்கள். இதற்கான பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கிட்டதட்ட 10,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
மேலும் ஆம்னி பஸ்களை எடுத்துக் கொண்டால் அதன் கட்டணம் நம்மை பண்டிகையே வேண்டாம் என சொல்ல வைத்து விடும் அளவுக்கு உள்ளது. இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட செலவை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு கிட்டதட்ட முடிந்து விட்டது. இதற்கிடையில் ரயில் பயணம் பற்றி சொல்லவே வேண்டாம். 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால் கடந்த ஜூலை மாதமே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது.
இதனால் தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி வழித்தடத்தில் நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு - நாகர்கோவில் இடையே இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. நவம்பர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளில் ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.