தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி, கோயில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்குவது போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
சிறப்பு தரிசன கட்டணத்தை குறைக்க திட்டம்:
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்துசமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு தரிசன கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக அனைத்து கோயில்களின் இணை ஆணையர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறப்பு கட்டண தரிசனத்தை நீக்குவதே நோக்கம்:
அதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசியின் போது, பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோயில் பேனர் வைரல்:
வரிசையில் நிற்காமல் தாமதமின்றி இறைவனை தரிசிக்க, தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோயில்களிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு விஐபி தரிசனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தான், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்களாம்மன் கோயிலில், கடவுள் மட்டுமே விஐபி என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்த கருத்தின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட பேனர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த பேனரில், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோது மன்னிக்க மாட்டார் என்ற, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையில் திமுக அரசின் திட்டங்கள்:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்திட நிதிவசதி இல்லாத கோயில்களின் எண்ணிக்கை 15 அயிரமாக உயர்த்தபட்டு, அவற்றிற்கான வைப்பு நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் திருக்கோயில்களில் பூஜை செய்திடும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. அதோடு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.