சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் பேச்சாளர் மகாவிஷ்ணுவை நேற்று போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், பல இடங்களில் தான் இவ்வாறே பேசியதாகவும், சித்தர்கள் தன்னை வழிநடத்துவதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கல்வியாளர்கள் வேதனை:
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசுப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற பெயரில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் பற்றியும், அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கைகளை ஆதரிக்கும் விதமாகவும் பேசிய கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், சென்னை அசோக்நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மகாவிஷ்ணுவின் பேச்சை கண்டித்து அவரிடம் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரிடம் அவர் பேசிய விதமும், அவரை அவர் கேள்வி எழுப்பிய விதமும் கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.
விமான நிலையத்திலே கைது:
இதையடுத்து, மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சார்பில் சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலிலே அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட மகாவிஷ்ணு, தான் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அமைச்சரிடம் நேரில் சென்று விளக்கம் அளிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்த சூழலிலே அவர் நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்தே அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மேலே கூறியவாறு வாக்குமூலம் அளித்தார். இந்த விவகாரத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையில், தனது ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபரை சும்மாவிடமாட்டேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசத்துடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு ஒரு நகைச்சுவை கலைஞராக தனது பணியைத் தொடங்கி பின்னர் பரம்பொருள் அறக்கட்டளை என்ற அறக்கட்டளையைத் தொடங்கி தன்னை மகாவிஷ்ணுவாக மாற்றிக் கொண்டார். மகாவிஷ்ணு இதுபோன்று பல இடங்களிலும், பல யூ டியூப் தொலைக்காட்சியிலும் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது.