ஆளுநர் படிக்காவிட்டாலும் அரசு தயாரித்து கொடுத்தபடியே அவைக்குறிப்பில் உரை இடம்பெறும் என்று அப்பாவு தெரிவித்தார். அதன்பின் பேசிய அவர், “ தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது.


மத்திய அரசிடம் இருந்து ரூ.50,000 கோடி பெற்றுத்தருவாரா ஆளுநர்? சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், சட்டமன்றமும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை” என்று தெரிவித்தார். அப்போது சட்டப்பேரவையில் இருந்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 


வெள்ள நிதி குறித்து சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தது என்ன..? 


நமது மாநிலம், கடந்த சில ஆண்டுகளில் பல பேரழிவுகளைச் சந்தித்தபோதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது என்பது பாராட்டத்தக்கது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் எதிர்கொண்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளால் மாநிலம் அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 44 மணி நேரம் வரலாறு காணாத அளவில் தொடர்ந்து பெருமழை பெய்தது. வெள்ள நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முழு அரசு இயந்திரமும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டு, நிவாரணப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மேற்கொண்டது. திறமையான திட்டமிடல், மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் நீர் மேலாண்மை போன்றவற்றால் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.


எனினும், பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. அரசால் மேற்கொள்ளப்பட்ட துரித நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளின் விளைவாக பெரும்பாலான பகுதிகள் ஒரு சில நாட்களிலேயே இயல்புநிலைக்குத் திரும்பின. மிக்ஜாம் புயலின் பாதிப்பில் இருந்து நமது மாநிலம் மீள்வதற்கு முன்னரே, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கணிசமான அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு, உடைமைகளும் சேதமடைந்தன.


மக்களின் துயர் நீக்கும் பொருட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1,487 கோடி ரூபாய் செலவில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட 24.25 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பல நிவாரண உதவிகளை அறிவித்தார். மேலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிதும் சேதமடைந்த பகுதிகளில், பாதிக்கப்பட்ட 6.63 இலட்சம் குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக தலா 6,000 ரூபாயும், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்த பகுதிகளிலுள்ள, பாதிக்கப்பட்ட சுமார் 14.31 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாயும், 541 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.


மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத எதிர்பாரா மழைப்பொழிவினால் மாநிலத்தின் பொதுச் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு 18,214 கோடி ரூபாயும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19,692 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இப்பேரழிவின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்ட இரண்டு விரிவான அறிக்கைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு அலுவலர் குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கும் என்று நம்புகிறோம்.


இயற்கைப் பேரிடர்களைத் திறம்படக் கையாண்ட இந்த அரசிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் மாதங்களில் நமது மாநிலமும் அதன் பொருளாதாரமும், இந்த பாதிப்புகளிலிருந்து வலிமையுடன் மீண்டெழும் என்று உறுதியாக நம்புகிறேன்.