விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தென்மேற்கு பருவமழை மிகவும் முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டிற்கு இந்த தென்மேற்கு பருவமழை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் பரவலாக மழைப்பொழிவைத் தரும். 

இயல்பை விட அதிக மழைப்பொழிவு:

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக கிடைக்கக்கூடிய மழைப்பொழிவு 106 சதவீதமாக பதிவாக வாய்ப்பு உள்ளது. இது வழக்கத்தை விட அதாவது ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மழைப்பொழிவை காட்டிலும் அதிகளவு ஆகும். 

வானிலை ஆய்வு மையம் கணிப்பு:

இந்த மழைப்பொழிவு நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கு பகுதியிலும் இயல்பை விட அதிகமாக (106 சதவீதம்) ஆகவும், வடமேற்கு இந்தியாவில் 92 முதல் 108 சதவீதமாவும் பதிவாக வாய்ப்பு உள்ளது. இதுவும் இயல்பை விட அதிகம் ஆகும். மானாவாரி விவசாயம் நடக்கும் விவசாயப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

அதேசமயம், இந்த தென்மேற்கு பருவமழை வடமேற்கு இந்தியா கிழக்கு இந்தியாவில் பெரியளவு மழைப்பொழிவைத் தராது. வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையால் போதிய அளவு கிடைக்காது. இந்த பகுதிகள் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகளவு மழைப்பொழிய வாய்ப்பு உள்ளது.

ஜுன் மாதம் எப்படி?

ஜுன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை இந்தியாவின் சில தெற்கு பகுதிகள், வடமேற்கு இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இருக்காது. எஞ்சிய பகுதிகளில் ஜுன் மாதத்தில் இயல்பை விட அதிகளவு மழைப்பொழிவை தென்மேற்கு பருவமழை அளிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாதாந்திர வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய இந்தியா, தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக அனைத்து மாநிலங்களும் தற்போது முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.