சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தற்போது பாம்பன் ரயில் பால பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய வழித்தடத்தில் மின் பாதை அமைக்கும் பணிகள் இறுதியடைந்துவரும் நிலையில், சென்னை-ராமேஸ்வரம் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பயண நேரம் வெகுவாக குறைய உள்ளது.
முடிவடைந்த மின் பாதை பணிகள் - விரைவில் வந்தே பாரத் ரயில்
அழகிய கடற்கரையை கொண்ட ராமேஸ்வரத்தை சுற்றி பல ஆன்மீக ஸ்தலங்கள், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், புயலால் அழிந்த தனுஷ்கோடி என பல சுற்றுலா இடங்கள் உள்ளன.
இவற்றை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினம்தோறும் வருகின்றனர். இந்நிலையில், பாம்பன் ரயில் பால பணிகள் முடிந்த நியில், அந்த வழித்தடத்தில் தற்போது இரவு நேர ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து பகல் நேர ரயிலை இயக்க கோரிக்கை எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரத்தில் புதிய ரயில் தடத்தில் மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், விரைவில் ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது.
ராமேஸ்வரத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டுவரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
ஏற்கனவே ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து தினந்தோறும் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை, சேது சூப்பர் பாஸ்ட் ரயில். இது, சென்னையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி வழியாக செல்கிறது. இதன் பயண நேரம் 11 மணி நேரமாக உள்ளது.
இதேபோல், மற்றொரு ரயிலாக, சென்னை-ராமேஸ்வரம் மெயில் இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. சுமார் 12 முதல் 12.30 மணி நேர பயணமாக செல்லும் இந்த ரயில், தாம்பரம், கடலூர், தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்கிறது.
சென்னை-ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில்
இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, காலையில் புறப்பட்டு இரவில் சென்று சேரும் வகையில் புதிய ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சென்னை-ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க உள்ளது தெற்கு ரயில்வே. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த அதிகவேக ரயில், 665 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை-ராமேஸ்வரம் வழித்தடத்தை, வெறும் 8 முதல் 9 மணி நேரத்தில் கடந்துவிடும் என கூறப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு சுமார் 3 முதல் 4 மணி நேர பயண நேரம் குறையும்.
வந்தே பாரத் ரயிலின் பயண அட்டவணை என்ன.?
இந்த வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் வகையிலும், மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும் வகையிலும் பயண அட்டவணை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் சென்றடையும் என மேற்கூறப்பட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலால், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.