" போதை பொருட்கள் கடத்தல் "

தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் பயணியர் போர்வையில் வரும் சில ஆசாமிகள் , உடைமைகளை திருடுவதோடு , கஞ்சா போன்ற போதை பொருட்களையும் கடத்துகின்றனர்.

Continues below advertisement

போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க , ரயில்வே பாதுகாப்பு படையும் , மாநில காவல் துறையின் கீழ் செயல்படும் ரயில்வே போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் , மாவட்டங்களில் இயங்கும் போலீசாருக்கு வரும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் , அவர்களும் ரயில்கள் , ரயில் நிலையங்களில் சோதனை நடத்தலாம் என , ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது ;

போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் கடத்தல்கள் தொடர்பாக , ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருவோரை பிடிக்க, சிறப்பு குழுக்களையும் அமைத்துள்ளோம்.

Continues below advertisement

கடந்த 2024 முதல் , கடந்த மாதம் வரை, 809 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 359 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம், 187 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒடிஷாவில் இருந்து தென்மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

இரவு நேரங்களில் , பொதுப் பயணியர் பெட்டிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மட்டுமின்றி, உள்ளூர் போலீசாரும், கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் இனி ஈடுபட உள்ளனர்.

ரயில்கள் , ரயில் நிலையங்களில் சோதனை செய்ய , உள்ளூர் போலீசாரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் உள்ளூரில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தி குற்றவாளிகளை பிடிக்கலாம். கஞ்சா பொருட்களையும் பறிமுதல் செய்யலாம். இருப்பினும், சம்பந்தப்பட்ட பகுதி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுப்பது நல்லது என தெரிவித்துள்ளோம்.