வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி விரைவாக முடிந்துவிட்டது. அதேபோல், வரும் 12 முதல் 18-ஆம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன. பேருந்துகளில் டிக்கெட் இல்லாத காரணத்தாலும் பண்டிகை நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற காரணத்தாலும் மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்.
இதனால் தென்னக ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் வகையில் கோவை முதல் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 16 ஆம் தேதி கோவையிலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், அடுத்த நாள் காலை 5 மணியளவில் சென்னை தாம்பரத்திற்கு வரும். இந்த சிறப்பு ரயில் மீண்டும் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.
அதேபோல் பொங்கல் பண்டிகை ஒட்டி பெங்களூருவில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 12 ஆம் தேதி, பெங்களூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் அன்று இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். மீண்டும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு அன்று நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறது.
இதுமட்டுமின்றி, சென்னை தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து 11 (இன்று), 13,16 ஆம் தேதிகளில் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
வண்டி எண் (06003) தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கில கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி வழியாக காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஜனவரி 12,14,17ஆம் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க இன்றில் இருந்து முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.