தமிழ்நாடு சந்தித்துள்ள புயல் பாதிப்புகளில் இருந்து மீளவும், சீரமைக்கவும் மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது ட்விட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “ கடந்த நூற்றாண்டில் 50 சூறாவளிகளை எதிர்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையைக் கொண்டுள்ள தமிழ்நாடு புயல் பாதிப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. காலநிலை மாற்றத்திற்குப் பின் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் பாதிப்பின் அளவானது மிகவும் அதிகமாக உள்ளது. 


தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் உள்ளிட்டவற்றிக்கு தேவையான நிதி குறித்தும் விரிவாக எடுத்துக்கூறும் 72 பக்க கோரிக்கை மனுவை தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர். SDRF இன் கீழ் வரையறுக்கப்பட்ட நிதி மட்டுமே தற்போது தமிழ்நாடு அரசிடம் இருப்பதால், சேதமடைந்தவற்றின் மதிப்பானது தற்போது கையிறுப்பு உள்ள நிதியைவிடவும் விட அதிகமாக உள்ளது. இந்த எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசிடம் இருந்து கணிசமான உதவி தமிழ்நாடு தேவைப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.