மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய 'மிக்ஜாம்' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 4) காலை 08.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 179 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு- தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மகலிபட்டினத்திற்க (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை பகுதியில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் அனைத்து இடங்களிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேருந்து சேவை முற்றிலும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் ரயில் சேவை மற்று விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை குறிப்பிட்ட மணி இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் உள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்படியான நிலையில் தண்டவாளங்களில் கனமழையால் நீர் நிரம்பியுள்ளதால் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டில் இருந்து புறப்படும் மொத்தல் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடி செல்லும் எக்ஸ்பிரஸ், ரயில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் திருநெல்வேலி- சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருவாயூர் ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். வைகை, பல்லவன் ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து மாற்று நேரத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தென்மாவட்டங்களை இணைக்கும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, பாண்டியன், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.