கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ் 58 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதில் 24 பேர் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிகளிலும், 34 பேர் தனியார் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இந்த பணி ஆணைகளை பெற்றவர்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 5 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 6 பேரும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த 12 பேரும் பொதுப்பிரிவை சேர்ந்த ஒருவரும் இது தவிர, பெண் ஓதுவார் ஒருவர் பணியாணை பெற்றுள்ளார்.
சென்னை, மாடம்பாக்கத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் ஓதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சுஹாஞ்சனா அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தோம், கோவிலுக்குள் நுழைந்து சுஹாஞ்சனாவை சுலபமாக சுலபமாகவே இருந்தது. பொதுமக்கள் சிலர் சுஹாஞ்சனாவிடம் செல்பி எடுத்துக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு ஏபிபி நாடு செய்தி நிறுவனம் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அவரிடம் பேசத் துவங்கினோம்...
என்னுடைய சொந்த ஊர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் என்னுடைய தந்தை துணி வியாபாரம் செய்து வருகிறார். சிறுவயது முதலே எனக்கு கடவுள் மீது ஈர்ப்பு இருந்த காரணத்தினால், கடவுள் பாடல்களை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது. கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு பெரியோர்கள் பாடும் பாடல்களை கேட்டு அதை நான் மனப்பாடம் செய்து சில நாட்கள் கழித்து அவர்களுடன் சேர்ந்து நானும் பாடத் தொடங்கினேன். கடவுள் பாடல்களை நான் பாடும் போது என் வீட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தினார்.
நான் பத்தாம் வகுப்பு படித்த பிறகு எனக்கு இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அது குறித்து வீட்டில் தெரிவித்தேன். என் வீட்டில் இருந்தவர்களும் இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க எந்தவித தடையும் செய்யாமல் அனுப்பிவைத்தனர். குமார சுவாமி நாதன் என்பவர் தனக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்தார். தேவாரம், திருவாசகம், திருமுறை உள்ளிட்டவற்றை குறித்து எதுவும் தெரியாது. இதன் காரணமாக ஆரம்பத்தில் தமிழ் உச்சரிப்பு, ராகம், தாளம் உள்ளிட்டவற்றை கற்க சற்று சிரமம் இருந்தது. இருப்பினும் என்னுடைய குருநாதர் தொடர்ந்து ஒரே பாடலை சரியாக வரும் வரை பலமுறை பாடவைத்து என்னை வழிகாட்டினார். அதேபோல் ’’நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடல்களை வருங்கால தலைமுறைக்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும் என எங்கள் குருநாதர் தெரிவித்துக் கொண்டே இருப்பார்’’.
அப்போது எனக்குள் ஒரு ஆசை இருந்து வந்தது, என் நண்பர்களிடம் தெரிவித்துக் கொண்டே இருப்பேன், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் கிடைத்தால் இதை நாம் வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று. அந்த நேரத்தில் கடவுள் அருளால் மங்கையர்கரசியர் அறநெறி அறக்கட்டளையில் மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை கற்றுக்கொடுக்க என்னை ஆசிரியராக நியமித்தார்கள். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றினேன். பள்ளியில் பணியாற்றிய பொழுது மாணவர்கள் கடவுளின் பாடல்களை பற்றி மட்டும் கற்றுக்கொடுக்காமல் ஒழுக்க நெறியையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். இந்நிலையில் எனக்கு திருமணம் ஆனதை தொடர்ந்து நான் சென்னைக்கு குடியேறினேன், அப்பொழுது என்னுடைய புகுந்த வீட்டினர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தித்தாளில் ஓதுவார் பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்தேன். இதனைத் தொடர்ந்து நான் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவார் பணிக்கு விண்ணப்பித்தேன். இதனைத் தொடர்ந்து நேர்காணல் வைக்கப்பட்டது .நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பணியில் இணைந்துள்ளேன். முதலமைச்சர் கையில் அதற்கான பணி நியமன ஆணைகளை பெற்றபோது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்ததாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும் ’’பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதித்து வருகிறார்கள் அதேபோல் ஆன்மீகத்திலும் பெண்கள் சாதிக்க வேண்டும். இசைக்கல்லூரி உள்ளிட்டவற்றை படித்து முடித்துவிட்டு இருக்கும் பெண்கள் இனி கோயில் பணிக்கு வருவதில் தயக்கம் காட்டக்கூடாது’’. மாவட்ட தோறும் இருக்கும் இசைப்பள்ளியில் சேர்ந்து படித்து பயனடைய வேண்டும். இதுவே தன்னுடைய ஆசை எனக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவனடியார்கள் சிலர் சுஹாஞ்சனா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரிடம் பேசுவதற்காக அவ்விடத்திற்கு வந்து விட்டனர்.
மூத்த சிவனடியார் ஒருவர் சுஹாஞ்சனாவை சந்தித்து விபூதி அளித்து வாழ்த்து தெரிவித்தார். ’’பெண் ஒருவர் ஓதுவார் பணிக்கு தேர்ந்தெடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உங்களைப் பார்த்து இன்னும் பல பெண்கள் இத்துறைக்கு வருவார்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கடமைப் பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்’’. அப்போது பெண் சிவனடியார் ஒருவர் உணர்ச்சி மிகுதியில் சுஹாஞ்சனாவை கட்டித்தழுவி, ஆனந்த கண்ணீருடன் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பெண் சிவனடியாரை கூறுகையில், அதை பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும் , தனக்கு கண் கலங்கி நிற்பதாக தெரிவித்தார்.