கரிசல் மண்ணுக்கு சொந்தக்காரர் கி.ராஜநாராயணன். தன்னுடைய 99 வயதில் இயற்கை எய்திருக்கும் இவருடைய நினைவுகள் குறித்து நடிகர் சிவகுமாரிடம் பேசினேன். ”தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராம்தான் இவருடைய சொந்த ஊர். ரொம்ப வசதியான குடும்பம். கரிசல் மண்ணில் விவசாயம் பண்ணவர். சின்ன வயசில் இருந்தே படிப்பு மேல பெரிய நாட்டம் இவருக்கு இருந்ததில்ல. பள்ளிகூடம் போகச்சொன்னா மாமரத்துல அல்லது புளியமரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருப்பார். இப்படிதான் கி.ராஜநாராயணன் வாழ்ந்தார். சுதந்திரத்துக்கு முன்னாலான இந்த மண்ணு எப்படியிருந்ததுங்குற வரலாற்றை நிறையப் பதிவு பண்ணியிருக்கிறார்.
”கம்ம நாயுடு எனும் இனம் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்து நிர்பந்தம் காரணமாக 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்கள். இந்த இனத்தை சேர்ந்தவர்கள் கரிசல் மண்ணை பண்படுத்தி எப்படி விருத்தி அடைஞ்சாங்கனு 'கோபல்ல கிராமம்' நூலில் சொல்லியிருப்பார். இந்த நூலின் வடிவமா கி.ரா.ஐயா தெரிந்தார். கதாநாயகனே இல்லாத இந்த நாவல்ல கதாபாத்திரத்தின் வடிவத்தில் எல்லாத்தையும் சொல்லியிருந்தார். எல்லாத்தையும் வரலாற்றுப் பூர்வமா எழுதியவர்தான் கி.ரா. வட்டார மொழியைப் பற்றி சொல்றதுக்கு 'சொல்லதிகாரம்' புத்தகத்தை எழுதினார். ஒரு சமயம் பாண்டிச்சேரி வைசியர் மண்சார்ந்த கலாச்சாரத்தை போதிக்க, இடைசெவல்ல இருந்த கி.ரா.குடும்பத்தையே ஷிப்ட் பண்ணி பாண்டிச்சேரிக்கு வர வெச்சார். இங்கே ஒரு காலனியில் கி.ரா.ஐயா குடும்பத்தை தங்க வெச்சார். இங்கே இருந்த பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு மரத்தடியில இருந்து கி.ரா வகுப்பு எடுப்பார்.
1987-ஆம் ஆண்டுல இருந்து கி.ரா ஐயா குடும்பத்துக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. நான் பொறந்த உடனே எங்க அப்பா இறந்துட்டார். அப்போ, கி.ராஜநாராயணனும் இவரின் மனைவி கணவதி அம்மாளும் என் மேல அளவு கடந்த பாசம் வெச்சிருந்தாங்க. இவங்க வெச்சிருந்த அன்புக்கும் பாசத்துக்கும் இணையே இல்லை. ரொம்ப நெருக்கமான தொடர்பில இவங்ககூட இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்தநாள் வரும்போது நிறைய எழுத்தாளர்கள்கூட சேர்ந்து பிறந்தநாளுல கலந்துக்குவேன்.
2019-ஆம் ஆண்டு வருஷத்துல கணவதி அம்மாள் இறந்துட்டாங்க. இப்போ ஐயாவும் இறந்துட்டாங்க. 99 வயசு வரைக்கும் கி.ரா.ஐயா நினைவாற்றல் உடன் வாழ்ந்திருக்கார். இவருடைய நினைவாக இலக்கியப் பரிசு போட்டி கொங்கு மண்ணுல நடத்திக்கிட்டு வர்றாங்க. ஒரு மகத்தான மனுஷன் 99 வயசு வரைக்கும் நினைவாற்றல் உடன் வாழ்ந்திருக்கார். இவரை மண்ணின் மைந்தனா பார்க்குறேன்.