மேலும் அறிய
மானாமதுரை அருகே காதல் ஜோடிகளாக மாறிய கற்கள்... தொல்லியல் அதிசயம், மக்களின் நம்பிக்கை என்ன ?
கீழடி அகழாய்வுக்கு அமர்நாத் இராமகிருஷ்ணன், வைகை ஆறு தோன்றும் மூல வைகை முதல் கடலில் கலக்கும் அழகன் குளம் ஆற்றங்கரை வரை 293 இடங்களை வைகைக்கரை தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளார்.

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு குத்துக் கற்கள்
Source : whatsapp
பெருங்கற்கால குத்துக் கல்லிற்கு இன்றும் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வு வளம்பெற இக்கற்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர்.
மானாமதுரை அருகே காதலர்களாகக் கருதப்படும் குத்துக் கற்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலூர், நத்தை புரக்கி விலக்குப் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு குத்துக் கற்கள் உள்ளன. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, நம்மிடையே தெரிவித்ததாவது...,” குத்துக்கல் அல்லது நெடுங்கல் என்பது பாறையின் பெரிய தனிக்கல்லை நிலையாக ஊன்றி அமைக்கப்படுவதாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தில் 2000 ஆண்டு முதல் 4500 ஆண்டுகளுக்கு முன் இறந்தோருக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இவ்வாறான குத்துக்கற்கள் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் காணக் கிடைக்கின்றன. குத்துக்கற்களை நம் முன்னோர்களாக நினைத்து வழிபடும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. கற்பதுக்கை அமைத்து கல்நடும் வழக்கம் பற்றி புறநானூறு அகநானூறு போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஒழுங்குபடுத்தப்படாத நீளமான பாறைக்கல், இறந்தவரை புதைத்த இடத்திலோ அல்லது அருகிலோ அவர்கள் நினைவாக நடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கீழடி அகழாய்வு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே குறிப்பாக தமிழர்களின் தொன்மையை உயிர்ப்பித்து உள்ளது எனலாம்.
அமர்நாத் இராமகிருஷ்ணன் அடையாளப்படுத்திய இடம்
கீழடி அகழாய்வுக்கு முன்னர் தொல்லியல் அறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் வைகை ஆறு தோன்றும் மூல வைகை முதல் கடலில் கலக்கும் அழகன் குளம் ஆற்றங்கரை வரை 293 இடங்களை வைகைக்கரை தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளார். அவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்ட 293 இடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலூர் நத்தை புரக்கி விலக்குப்பகுதியில் உள்ள பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு குத்துக் கற்கள் இப்பகுதி மக்களால் காதலர்களாக கருதப்படுகின்றது. இப்பகுதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் ஆடு மாடு மேய்க்கும் பொழுது பழகி காதலர்களானார்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே ஊரை விட்டு ஓடிப்போய் வேறு எங்காவது வாழலாம் என்று முடிவு செய்து அவர்கள் ஊரை விட்டு ஓடும் போது ஊர்க்காரர்கள் விரட்டி வர பெரு மழையும் பெய்தது இவ்விடத்தில் வரும்பொழுது அவர்கள் மேல் இடி விழுந்து கல்லாக சமித்தனர் என்று கூறுகின்றனர்.
வெயில், மழை, கால மாற்றங்களைத் தாண்டி இன்றும் நம்மிடையே தொன்மையை உணர்த்தி நிற்கிறது
இன்றும் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வு வளம்பெற இக்கற்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர், இக்கற்கள் ஒன்று ஐந்து அடி உயரமும் மற்றொன்று ஏழடி உயரமும் கொண்டதாக உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் செம்புராங்கல்லால் ஆன குத்துக்கல் என்பது கூடுதல் சிறப்பு, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெயில், மழை, கால மாற்றங்களைத் தாண்டி இன்றும் நம்மிடையே தொன்மையை உணர்த்தி நிற்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























