உறவினப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை !! சிவகங்கை வாலிபருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் , 26 வயது இளைஞருக்கு மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

11 - ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிவகங்கை அருகே உள்ள கோமாளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி ( வயது 26 ) என்பவர் தினக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, தனது உறவினரான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தச் சிறுமி 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது.
அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையெடுத்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து , கருப்பசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது அரசு தரப்பில் பல்வேறு சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த நீதிபதி ரோகிணி, குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமி மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
61 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ₹1,000 அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்டவர் தனது உறவினர் என்பதை அறிந்திருந்தும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கூடுதலாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் கருப்பசாமிக்கு மொத்தமாக 61 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 4,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ரோகிணி உத்தர விட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றத்தில் குற்றவாளிக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















