இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் RRB Group-D பதவிகளுக்கான தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  நடைபெற்று வருகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

இலவசப் பயிற்சி வகுப்புகள்
 
மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக தொடர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகள்  வழங்கப்பட்டு வருகிறது. இத்தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட TNPSC-Group IV தேர்வு முடிவில் இத்தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பயின்ற 9 மாணவர்கள் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவியில் பணி நியமனம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC-Group II&IIA தேர்வில் 3  மாணவர்கள் உதவியாளர் பதவியில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் அரசுப் பணியில் உள்ளனர். தற்போது, இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) Group-D பதவிகளில், 22,195 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 10-ஆம்  வகுப்பு தேர்ச்சி அல்லது  I.T.I  தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 01.01.2026 அன்று 18 வயது நிறைவு பெற்றிருத்தல் வேண்டும். 
 
பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
 
RRB Group-D பதவிகளுக்கான தேர்விற்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். குறிப்பிட்டுள்ள தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வார நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 வரை நடைபெற்று வருகிறது. மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. RRB Group-D பதவிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ப விருப்பும் மாணாக்கர்கள் தங்களது புகைப்படம் மற்றும் சுய விவரங்களுடன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
 
புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்ட நுாலகத்தில் பராமரிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர்கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மெய்நிகர் கற்றல் இணையதளத்தைப் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.