சிவகங்கை அருகே, போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற காவலாளி, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை தாக்கிய காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், அஜித்குமார் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு கூறி, காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் நிகிதா புகார் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கோயிலின் கோ சாலையில் வைத்து, சீருடை அணியாத காவலர்கள், அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ, அங்குள்ள சுவற்றின் ஓட்டையின் வாயிலாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், வீடியோ எடுத்தவருக்கும் தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் மீது நடவடிக்கை
நேற்று உடற்கூராய்வுக்குப் பின் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிவகங்கை எஸ்.பி ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ், சிவகங்கை மாவட்ட எஸ்.பி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு
அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சரையும் கேள்விக் கணைகளால் துளைத்துள்ளனர். இந்த சூழலில், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐ விசாரணைக்கு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது.