கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வேளாண் தொழிலை அழித்துவிட்டு, அந்நிலங்களில் சிப்காட் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களைக் கையாளக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன குறிப்பாகப் பூச்சிக்கொல்லி மருந்து, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து மற்றும் மாத்திரைகள், ரசாயனம், PVC ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
சிப்காட் சுற்று வட்டாரப் பகுதியில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சாமானிய, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நிலையில் இத் தொழிற்சாலைகளின் செயல்பாட்டால் பல்வேறு விதங்களிலும் இவர்களின் வாழ்வாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
5 செப்டம்பர் 2025 அன்று கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின்போது வெளியேறிய மாசு காரணமாக அருகாமைப் பகுதியில் வசிக்கக்கூடிய இரண்டு கர்ப்பிணி பெண்கள் 5 குழந்தைகள் உட்பட சுமார் 93 பேர் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மற்றும் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள் இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
அருகாமைப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களோ இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவினால்தான் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு, மூச்சடைப்பு போன்ற உடனடியாக பாதிப்புகள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவி மட்டும்தான் வேறு எந்த ரசாயனப் பொருள்களும் இல்லை நீராவி வெளியேறிய குழாயில் இருந்த தூசி நீராவியுடன் கலந்ததால் நிறமாகத் தெரிகிறது என்று தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவியா அல்லது ரசாயனமா என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டிய எந்த அரசுத் துறையும் இது குறித்து பொதுமக்களுக்கு / பொதுவெளியில் விரிவான அறிக்கை வெளியிடவில்லை.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்காக, குடிகாடு, தியாகவல்லி , நடுத்திட்டு நொச்சிக்காடு ஆகிய பகுதிகளில், சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த, தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வெட்டிவேர், மணிலா, சவுக்கு, நெற்பயிர்கள், தென்னனை, முந்திரி உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழில்கள் நடந்து வரும் நிலையில், அத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் உள்ளனர்.
இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பருவநிலை மாற்றம் குறித்து சிந்திக்காமல், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.
விவசாயிகளின் விளைநிலம் மட்டுமல்லாது, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளையும் கையகப்படுத்துவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிப்காட் நிறுவனங்களால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; நிலத்தடி நீர் மாசுப்பட்டிருக்கிறது; சிப்காட் நிறுவனங்களை சுற்றி உள்ள கிராமங்களில் வேளாண் தொழில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது; பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற பல்வேறு சிக்கலால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சிப்காட் நிறுவனங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு எதிரான எந்த ஒரு திட்டங்களையோ, நிறுவனங்களையோ விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும் புதிதாக நிறுவ கூடாது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சூழலில் வேறு தொழிலுக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கும்; இதனால் விவசாயிகளின் நிலங்களை விட்டுக் கொடுக்க முடியாது.
எனவே, கடலூர் மாவட்டம் குடிகாடு, தியாகவல்லி ஆகிய பகுதிகளில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.