காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Singappen Special Task Force : மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு, 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கி 354 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொழில் நுட்ப உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கிட ஏதுவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

மகளிர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு
தமிழகத்தில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேர்தலில் தவெக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இதனையடுத்து மகளிர் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் தொடங்குவது தொடர்பாக அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நேற்று முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
அந்த வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும். மாநிலம் முழுவதும் 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகள் தற்போது பணியிலுள்ள 140 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 420 காவலர்களுடன் செயல்படத் தொடங்கும்.
மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு, 2,545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார். புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் 49 காவல் ஆய்வாளர்கள், 2 காவல் ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்), 641 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்),1,843 காவலர்கள் மற்றும் 7 அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர். இந்தப் படைக்கான காவலர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில்,
காவல்துறையின் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களைத் தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், அணுகுவதற்குக் கடினமான மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் திறம்படக் கண்காணிப்பதற்கும், ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரால் ட்ரோன் ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள்
மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பயன்பாட்டிற்காக, 319 நான்கு சக்கர வாகனங்களும் 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக, நிகழ்நேரக் காணொளி ஒளிபரப்புத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்திய உடுப்புகளும் மற்றும் அணுகமுடியாத, கடினமான நிலப்பரப்புகளில் கண்காணிப்பதற்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Drones) உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்களும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக காவல்துறை தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் செயல்பட இருக்கும் 270 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கள அலகுகளின் பணிகளைக் கண்காணித்து மேற்பார்வையிடுவதற்காக, தலைமையகத்தில் அவருக்கு உதவியாக ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், எட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இருபது காவலர்கள் இடம் பெறுவார்கள் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















