Sharmika Saran: சித்த மருத்துவர் ஷர்மிகாவின் பதில் திருப்தி அளிக்காததால் வல்லுநர் குழு அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளது.
ஷர்மிகா:
இணையத்தில் தனது வீடியோ பதிவுகள் மூலம் சித்த மருத்துவர் ஷர்மிகா தவறான தகவல்களை பரப்புவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி எழுந்த புகாரின் அடிப்படையில், நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் தெரிவித்தது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது. மேலும் அந்த நோட்டீஸில் ஜனவரி மாதம் 24ஆம் தேதி நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
சர்ச்சை பேச்சு:
குழந்தை பிறப்பு, கர்ப்பம், உடல் எடை அதிகரித்தல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகா கூறிய கருத்துகள் சர்ச்சையானது. மேலும், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை அதிகரிக்கும் போன்ற கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சித்த மருத்துவர் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை ஷர்மிகா உளறுவதாக இணையதளத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து சித்த மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். புகாரை அடுத்து சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் என அனுப்பப்பட்டதாக இந்திய மருத்துவம், ஹோமியோபதி வாரியம் இணை இயக்குனர் பார்த்திபன் கூறியிருந்தார்.
வல்லுநர் குழு முன்னர் ஆஜர்
நோட்டீஸின் அடிப்படையில் இன்று வல்லுநர் குழு முன்னர் ஆஜரான சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கம் அளிக்கப்பட்டதுக்கு பின்னர் வெளியே வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அவர் அதற்கு எந்த விதமான பதிலும் சொல்லாமல் பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டுச் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார்.
விளக்கம் கேட்ட வல்லுநர் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "சித்த மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக சித்த மருத்துவர் பேசியது குறித்த பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது, குளோப் ஜாமுன் உட்கொண்டால், ஒரேநாளில் மூன்று கிலோ எடை அதிகரிக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என அவர் கூறிய இந்த முக்கியமான கருத்துக்கள் மூன்று கேள்விகளை மையப்படுத்திதான் வல்லுநர் குழு கேட்டோம். அதற்கு, ஷர்மிகா விளக்கமளித்தார், அவரது விளக்கம் திருப்தியளிக்காததால் எழுத்து வழியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளனர்.