Casting Couch Leaked Videos: தனிநபர் விவகாரங்களை பொதுவெளியில் கசியவிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதும், தண்டனைக்குரிய குற்றம்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அழுக்கான சமூக வலைதளங்கள்:
சமுக வலைதளங்கள் அழுக்கானதாகவும், ஆபத்தானதாகவும் உருவெடுத்து பன்னெடுங்காலமாகிவிட்டது. அவற்றால் தினசரி நிகழும் குற்றங்களை பட்டியலிட்டால் நேரம் போதாது. ஒரு தரப்பினர் அதனை பொழுதுபோக்கிற்காகவும், சுய வளர்ச்சிக்காகவும், வருவாய் ஈட்டும் தளமாகவும் பயன்படுத்துகின்றனர். அதேநேரம், அவதூறு பரப்புவது, வெறுப்பு உணர்வை தூண்டுவது, பிறரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, அந்தரங்க மற்றும் தனிநபர் விவரங்களை வெளியிடுவது என, தவறுகளுக்கான ஆயுதமாகவும் சமூக வலைதளங்களை மற்றொரு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வலையில் சமீபத்தில் சிக்கியவர் தான், பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல் நடிகை.
இணையத்தில் வைரலான வீடியோ
குறிப்பிட்ட நடிகையின் வீடியோ எதிர்பாராத விதமாக இணையத்தில் கசிந்துள்ளது. அடுத்த நொடியே பெரும்பாலான இணைய சமூகம் அந்த வீடியோவை, மின்னல் வேகத்தில் ஷேர் செய்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையானதுமே குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அந்த வீடியோவை ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்து இருந்த சமூக நல ஆர்வலர்கள், தங்களது பதிவின் கமெண்ட் பாக்சில் புள்ளி வையுங்கள், நேரடியாக மெசேஜ் அனுப்புங்கள் வீடியோ பகிரப்படும் என சமூக சேவை செய்துள்ளனர். இதனை கண்டதும் அந்த பதிவுகளுக்கு கீழே, நூற்றுக்கணக்கானோர் புள்ளி வைத்ததை எல்லாம் வக்கிரத்தின் உச்சம்.
அப்படி என்னப்பா வக்கிரம்
பெண்கள் குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் இப்படி கசிவதும், அதிகம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதும் இது முதல்முறையல்ல. இதனால் பல முன்னணி நடிகைகளே பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கே வீடியோவை அனுப்பி, இது நீங்கள் தானா? என உறுதிப்படுத்துங்கள் என்று கேள்வி எழுப்புவது, தகாத வார்த்தைகளுடன் மெசேஜ் அனுப்புவது? வீடியோவை பார்த்து விட்டீர்களா? என சமூக வலைதளங்களில் பகிர்வது, உங்களுக்கு வெக்கமாக இல்லையா? என்றெல்லாம் கமெண்ட்களில் கதறுவது எல்லாம் அறிவும், மனசாட்சியும் இருப்பவர்கள் செய்ய மறுக்கும் காரியம்.
ஒருவேளை அந்த வீடியோவை உடனடியாக ரிப்போர்ட் அடித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் பாராட்டலாம். ஆனால், எதற்கு? எப்படி? ஏன் இந்த வீடியோ வெளியானது? என சற்றும் சிந்திக்காமல், சரமாரியாக சமூக வலைதளங்களில் பகிரும் கூட்டம் தான் இன்று இணையத்தில் நிரம்பி வழிகிறது.
சோசியல் மீடியா ஆபாசம்
தங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதனை படம்பிடித்து கசியவிடுபவர் தான் அங்கு உண்மையான குற்றவாளி. நியாயமாக பார்த்தால் ஒட்டுமொத்த சமூகமும் வீடியோவை கசியவிட்டவருக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் நின்று கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். ஆனால், அதைவிடுத்து பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இப்படி எல்லாம் செய்யலாமா? நீ எல்லாம் பெண் தானா? என பாடம் நடத்துபவர்களும், மேடம் அடுத்த முறை இன்னும் நல்ல குவாலிட்டியில் வீடியோ போடுங்கள் என்றும் கமெண்ட் செய்யும் காம மிருகங்களும், அடிப்படை அறிவு கூட இல்லாத தற்குறிகளும் தான் சமூக ஊடகங்களில் நிறைந்து வழிகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் துப்பாட்டா போடுங்க தோழி என்ற போராளி கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்பதை எள்ளளவும் மறுக்க முடியாது.
உங்க பொண்ணு வீடியோவ ஷேர் பண்ணுவிங்களா?
வெட்கமோ, கொஞ்சம் கூட கூச்சமோ இன்றி சமூக வலைதளங்களில் புள்ளி வைத்து வீடியோ கேட்கும் பராமாத்மாக்களே, அந்த வீடியோவில் உங்கள் மகள், மனைவி, தங்கை, தாய் அல்லது தோழி இருந்தாலும் இதையே தான் செய்வீர்களா? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண கேள்வியாக தோன்றலாம். ஆனால், அந்த சூழலை அனுபவிப்பர்களுக்கு தான் அதன் வலி புரியும். நீங்கள் பகிரும் வீடியோக்களால், குறிப்பிட்ட பெண் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவளைச் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பமுமே கூனி குறுகி நிற்கும். சம்பவத்திற்கு பிறகு இந்த சமூகம் அவர்களை நடத்தும் விதம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எங்கேயோ? யாருக்கோ? நடக்கிறது நமக்கு என்னவென இன்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது நாளைக்கே உங்களுக்கும் நடக்கலாம். அதனை துளியேனும் நினைத்து பார்த்தால் இப்படி எந்தவொரு வீடியோக்களையும் பகிரமாட்டீர்கள். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நாம் அனைவரின் கடமை என்பதை மனதில் நிறுத்துங்கள்.
புரட்சி கருத்து மட்டும் போதுமா?
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போதெல்லாம், அரசு சரியில்லை, காவல்துறை முறையாக செயல்படுவதில்லை என கொக்கரிக்கிறோம். அதேநேரம், ஒரு நல்ல மனிதனாக நாம் வாழ்கிறோமா என்றும் அவ்வப்போது நமக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்ளுங்கள். உணர்ச்சிகளால் நிரம்பியவர்கள் தான் மனிதர்கள். அதன் விளைவாக ஏற்படும் அந்தரங்கமும் அப்படி தான். அது அவர்களது தனிப்பட்ட உரிமையே தவிர குற்றமல்ல. ஆனால், அதுதொடர்பான வீடியோக்களை பகிர்வது தான் உண்மையிலேயே குற்றச்செயல் ஆகும்.
தண்டனைகள் என்ன?
இதுபோன்ற வீடியோக்களை பகிரும் மற்றும் கசியவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும்.
தகவல் தொழில்நுட்ப (IT) சட்டம், 2000
- பிரிவு 66E - தனியுரிமை மீறல் (தண்டனை: 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம்)
- பிரிவு 67 - ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல் (தண்டனை: 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்)
- பிரிவு 67A - பாலியல் தொடர்பான உள்ளடக்கத்தை வெளியிடுதல் (தண்டனை: 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்)
2. இந்திய தண்டனைச் சட்டம் (IPC)
- பிரிவு 354C - பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் (தண்டனை: 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை)
- பிரிவு 509 - பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் (தண்டனை: 3 ஆண்டுகள் சிறை)
- பிரிவு 500 - அவதூறு (தண்டனை: 2 ஆண்டுகள் வரை சிறை மற்றும்/அல்லது அபராதம்)