திருப்பத்தூர்: வாணியம்பாடி பகுதியில் மதரஸா பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் கடும் கண்டணத்தை தொடர்ந்து ஆசிரியரை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வரும் நிலையில் இவர்கள் மதம் சார்ந்து அறிவு மற்றும் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில் பல மதரஸா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் இசுலாமிய மதம் சார்ந்த உபதேசங்கள் மற்றும் குரான் வசனங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் பயில்கின்றனர்.
இதற்காக வாணியம்பாடி பஷிராபாத் மசுதியின் மேல் தளத்தில் செயல்பட்டு வரும் மதரசா பள்ளியில் 60 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் நான்கு ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று தற்போது சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் ஆசிரியர் மாணவர்களை கடுமையாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், ஒரு மாணவரை கொடூரமாக தாக்கி தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களின் கடுமையான கண்டனங்களுக்கு பிறகு சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து விடுவிக்கபட்டதாக மதரஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை கொடுமையாக தாக்கிய அந்த ஆசிரியர் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சுஹேப் என கூறப்படும் நிலையில் மதரஸா நிர்வாகிகள் ஆசிரியரின் விவரங்களை கூற மறுத்து விட்டனர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை கொண்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..