அமெரிக்கா விதித்த வரி தடை; இந்தியாவின் இறால் ஏற்றுமதி 6% உயர்வு! புதிய சந்தைகள் மூலம் சாதனை!
அமெரிக்கா விதித்த வரி தடையை மீறி — இந்தியாவில் கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிக அளவில் கடல் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை : அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத இறக்குமதி வரி இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிக அளவில் கடல் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கடல் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத இறக்குமதி வரி இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் மற்றும் மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால், அந்த தாக்கம் குறைக்கப்பட்டதோடு, கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிக அளவில் கடல் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் கடல் வளங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
இந்தியாவின் கடல் வளங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், உள்ளூர் சந்தையில் கடல் உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலை சிரமமாகியுள்ளது. இதனால் ஆழ்கடலில் இருந்து கிடைக்கக்கூடிய இறால்களைப் பயன்படுத்தி, அவற்றின் குஞ்சுகளை சிறப்பு பண்ணைகளில் வளர்த்து, விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பும் நடைமுறை பல மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம், ஆந்திரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் இறால் வளர்ப்பு தொழில் முக்கியமாக நடைபெறுகிறது. குறிப்பாக ஆந்திரா மாநிலம், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக திகழ்கிறது. இங்கு தயாராகும் இறால்கள் உள்ளூர் சந்தையிலும், வெளிநாடுகளிலும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய இறால்களின் முக்கிய கொள்முதல் நாடுகளாக உள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமளவில் அன்னியச் செலாவணி கிடைத்து வந்தது. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவிலிருந்து அதிகளவில் இறால்களை இறக்குமதி செய்து வந்தது.
ட்ரம்பின் வரி அதிர்ச்சி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால், தொன்றுதொட்டு நட்பு நாடாக இருந்து வரும் ரஷ்யாவுடன் இந்தியா தனது வர்த்தக உறவைத் தொடர்ந்தது. இதனால் அதிருப்தியடைந்த ட்ரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார்.
இந்த வரி காரணமாக அமெரிக்க வியாபாரிகள் இந்திய கடல் உணவுப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் குறைத்தனர். இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இறால் விலை தாறுமாறாக வீழ்ச்சி அடைந்தது.
மோடி அரசின் விரைவான நடவடிக்கை
அமெரிக்கா விதித்த தடையை பொருட்படுத்தாமல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிற நாடுகளுடன் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவாக, அமெரிக்காவைத் தவிர்ந்த பிற நாடுகள் இந்திய கடல் உணவுப் பொருட்களை அதிகளவில் கொள்முதல் செய்ய ஆரம்பித்தன.
வியட்நாம் 105 சதவீதம், தாய்லாந்து 36.32 சதவீதம், ஐரோப்பிய 32.59 சதவீதம், சீனா 14 சதவீதம் ஆகிய அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மொத்தத்தில், கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாக கடல் உணவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, இந்தியா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
இறால் வளர்ப்போருக்கு புதிய நம்பிக்கை
இந்த உயர்வு காரணமாக இறால் வளர்ப்போர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். “அமெரிக்கா தடை விதித்த போதிலும், இந்தியாவின் இறால் சந்தை சரிவின்றி வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய நாடுகளுடன் ஏற்பட்ட வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி தரும்,” என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முன்னேற்றம், இந்திய கடல் உணவுத் துறையின் தன்னம்பிக்கையையும், உலக வர்த்தகத்தில் அதன் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.





















