திருவள்ளூர் அருகே பூந்தமல்லி மேல்நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் முன்பு, கழிவு நீர் தேங்கி நின்றதால், மாணவர்கள் கடும் ஆவதிக்கு ஆளாகினர்.
திருவள்ளூர் அருகே பூந்தமல்லி மேல்நகர் பகுதி உள்ளது. இங்கு 1ஆவது வார்டில் அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் முன்பு 2 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கழிவுநீர் துர் நாற்றம் தாங்காமலும், சுகாதாரம் கருதியும் சில மாணவர்கள் மதில் மீது ஏறி, பள்ளிக்குச் செல்வதைக் காண முடிகிறது.
மக்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர். குறிப்பாக, பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அண்மையில் அறிவித்த ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கவனம் செலுத்தி வருவதாகவும் அடிப்படை கட்டமைப்பு பிரச்சினைகளை கவனிக்காமல் விட்டு விடுவதாகவும் அங்குள்ள பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.