இந்திய அளவில் தமிழ்நாடு பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தொலைதூரப் பேருந்து பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக அளவு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) தனது சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
நீண்ட தூரப் பயணங்களை எளிதாக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வால்வோ பேருந்துகளுக்கும், தற்போதுள்ள ஏசி பேருந்துகளுக்கும் இடையிலான முக்கிய வித்தியாசங்கள் தெரிந்து கொள்வோம்.
கட்டமைப்பு மற்றும் தயாரிப்புத் தரம் (Body & Build)
சாதாரண அரசு ஏசி பேருந்துகள் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களின் சேஸிஸ் மீது, தனியார் பாடி பில்டர்களால் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், வால்வோ 9600 பேருந்துகள் அந்த நிறுவனத்தின் நேரடித் தொழிற்சாலையிலேயே முழுமையாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால் பேருந்தின் ஒவ்வொரு பாகமும் துல்லியமாகவும், அதிக உறுதியுடனும் இருக்கும்.
மல்டி ஆக்சில் தொழில்நுட்பம் (Axle System)
சாதாரண ஏசி பேருந்துகள் 'சிங்கிள் ஆக்சில்' (6 சக்கரங்கள்) கொண்டவை. ஆனால் வால்வோ பேருந்துகள் 'மல்டி ஆக்சில்' (8 சக்கரங்கள்) கொண்டவை. பின்னால் உள்ள கூடுதல் சக்கரங்கள் பேருந்தின் எடையைச் சீராகப் பிரிப்பதோடு, வளைவுகளில் திரும்பும்போது கூடுதல் நிலைத்தன்மையை (Stability) வழங்குகின்றன.
தரமான இருக்கைகள் (Seating Layout)
வால்வோவின் தனித்துவமே அதன் 'தியேட்டர் ஸ்டைல்' அமரும் முறைதான். அதாவது, பின்னால் உள்ள இருக்கைகள் முன்னால் இருப்பதை விடச் சற்று உயரமாக இருக்கும். இதனால் எல்லா பயணிகளுக்கும் முன்பக்கச் சாலைக் காட்சி தெளிவாகத் தெரியும். சாதாரண பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் ஒரே மட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
பயணிகளுக்கான சௌகரியம்
வால்வோ பேருந்துகளில் மிக அகலமான ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு ஒரு திறந்தவெளிப் பயண உணர்வைத் தரும். சாதாரண ஏசி பேருந்துகளில் ஜன்னல்கள் சிறியதாக இருப்பதால், உட்புறம் சற்று நெரிசலாகத் தோன்றும்.
நீண்ட தூரப் பயணங்களில் இன்ஜின் சத்தம் பயணிகளைச் சோர்வடையச் செய்யும். வால்வோ பேருந்துகள் 'சவுண்ட் புரூப்' வசதி கொண்டவை, இதனால் இன்ஜின் சத்தம் உள்ளே கேட்காது. சாதாரண ஏசி பேருந்துகளில் இன்ஜின் அதிர்வுகளைப் பயணிகள் உணர முடியும், ஆனால் வால்வோவில் அந்தப் பிரச்சனை இல்லை.
பாதுகாப்பு அம்சங்கள் (Advanced Safety)
புதிய வால்வோவில் 'எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்' மற்றும் 'ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்' போன்ற நவீன வசதிகள் உள்ளன. இது அவசர காலங்களில் பேருந்து கவிழாமல் இருக்கவும், சறுக்காமல் இருக்கவும் உதவுகிறது. இதன் பிரேக்கிங் சிஸ்டம் லேட்டஸ்ட் வசதிக்குள்ள இதுக்கும் என்பதால் விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
சொகுசு வசதிகள்
வால்வோ பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது கால்கள் வலிக்காமல் இருக்க 'கால்ப் சப்போர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இருக்கையைச் சாய்த்துக் கொண்டு படுத்தபடி செல்ல இது மிகவும் வசதியாக இருக்கும். சாதாரண ஏசி பேருந்துகளில் புஷ்-பேக் வசதி இருந்தாலும், கால்களை நீட்டிச் செல்லக் கூடுதல் வசதிகள் போதுமானதாக இருக்காது. இவ்வாறு இருப்பது பயணத்தை இன்னும் சொகுசாக மாற்றும்.
வால்வோ பேருந்துகள் அதிக உயரமானவை என்பதால், அதன் அடியில் மிகப்பெரிய 'லகேஜ் ஸ்பேஸ்' உள்ளது. பயணிகள் தங்களது பெரிய பெட்டிகளை எவ்விதச் சிரமமும் இன்றி வைக்க முடியும்.
ஏசி மற்றும் காற்றின் தரம்
வால்வோவில் தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இது பேருந்து முழுவதும் ஒரே சீரான குளிர்ச்சியைப் பராமரிக்கும். சாதாரண ஏசி பேருந்துகளில் சில இடங்களில் அதிக குளிர்ச்சியாகவும், சில இடங்களில் குறைவாகவும் இருக்கும் சூழல் ஏற்படலாம்.
கட்டணம் மற்றும் பயண நேரம் (Fare & Travel Time)
வால்வோ பேருந்துகள் அதிவேகமாகவும், நிறுத்தங்கள் குறைவாகவும் இயக்கப்படுவதால் பயண நேரம் குறைகிறது. இந்தச் சொகுசு வசதிகளுக்காக சாதாரண ஏசி பேருந்துகளை விட சுமார் 150 முதல் 250 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.