சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த அவருக்கு, சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு இன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் , தற்போது அவர் புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு திமுகவினர் மலர் தூவியும், துண்டுகள் அணிவித்தும் வரவேற்பளித்தனர்.
”முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”
அப்போது பேசிய அவர், முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு , அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு . அதை நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து காட்டுவேன் என தெரிவித்தார்.
நிபந்தனை:
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,, “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், வாரத்த்தில் இரண்டு தினங்கள் - திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.