ஆட்சியை கவிழ்க்க சதி

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், அந்த ஆட்சியை கவிழ்க்க தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வரும் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆசோக்குமார் மீது போலீஸ் குற்றம்சாட்டியது. இதனையடுதுத இரண்டு பேரும் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வந்தனர். அதே நேரம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் விதித்தது. ஆனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தனர்.

Continues below advertisement

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது, வேறொரு வழக்கில் கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில்,  தங்களுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளதாகவும், அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேறு வழக்குகளில் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கைது செய்ய தடை விதிக்க வேண்டும்

அதே நேரம் குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து தங்களுக்கு சொந்தான இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் தடுக்கவில்லை என்றும், எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுவில் பொத்தாம் பொதுவான உத்தரவை கோருவதாலும், பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாலும், மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.

செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

செந்தில்பாலாஜி, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக் கூடும் என அச்சம் உள்ளதாகவும், வழக்குகளின் விசாரணையில் தலையிடவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்து சட்டப்படி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என மட்டுமே கோருவதாகவும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து முன் ஜாமீன் பெறவில்லை.  இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.