செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூலை 26ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவலை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலியில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


செந்தில்பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு: 


செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், என்.ஆர். இளங்கோ நேற்று வாதங்களை முன் வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா இன்று வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு ஜூலை14 ம் தேதி விசாரணை முடிக்கப்படும் என நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். 


இருதரப்பு வாதங்கள்: 


அதிகார வரம்பை மீறிய அமலாக்கத்துறை - கபில் சிபல்


செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், "ஆரம்பம் முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகார வரம்பை மீறினர். சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டனர் என்ற நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது.


செந்தில் பாலாஜியை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை. ஆனால், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.  சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது" என தெரிவித்தார். 



இதை தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதியின் இந்த நடைமுறை சரியானதல்ல.


சோதனை தொடங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு அளித்தார்: என்.ஆர். இளங்கோ


ஜூன் 13ம் தேதி சோதனை துவங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு மற்றும் வாக்குமூலமும் அளித்தார். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கதுறை எப்படி குற்றம் சாட்டுகின்றனர்.


காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப பெற்றிருக்க வேண்டும். அதை விடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிபதிக்கு அமலாகத்துறை மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது" என தெரிவித்தார்.