பாட்டிலுக்கு 10 ரூபாய் பாலாஜி என்று விஜய் பாட்டு பாடும்போதுதான் அவர் மீது செருப்பு வீசப்பட்டதா? நடந்தது என்ன? என்று வீடியோ வெளியிட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
’’என்னை குறித்து விஜய் பேசும்போது அல்லது பாட்டு பாடும்போது தான், செருப்பு வீசப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. விஜய் வாகனத்தின் மீது நின்று பேசியது மொத்தம் 19 நிமிடம்.
விஜய் பேசிய 3 நிமிடத்தில் நடந்தது என்ன?
ஆனால் விஜய் பேச ஆரம்பித்து 3ஆம் நிமிடத்தில் என்னைக் குறித்துக் கூறினார். ஆனால் 6ஆவது நிமிடத்தில் இரண்டு முறை செருப்பு வீசப்பட்டது. குறிப்பாக 6.05 நிமிடத்தில் முதல் முறை செருப்பு வீசப்பட்டது. தொடர்ந்து 6.40 நிமிடத்தில் 2ஆவது முறை விஜய் வண்டியின் மீது செருப்பு வந்து விழுந்தது.
மீண்டும் விஜய் என்னைப் பற்றி 16ஆவது நிமிடத்தில்தான் பேசினார். விஜயின் கவனத்தை ஈர்க்க, செருப்பு வீசப்பட்டிருக்கலாம்.
இடப் பற்றாக்குறையால் தவெக தொண்டர்களில் சிலர், ஜெனரேட்டர் அறைக்குள் சென்றபோதுதான், அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விளக்குகள் அணைந்தன. அப்போதும் தெரு விளக்குகள் எதுவும் அணைக்கப்படவில்லை, அரசு மின்சாரத்தை நிறுத்தவில்லை.
அதேபோல சம்பவ இடத்தில் அடுத்த நாள் ஆயிரக்கணக்கில் செருப்புகள் கிடந்தன. ஆனால் ஒரு காலி குடிநீர் பாட்டில்கூட கிடக்கவில்லை. தவெகவினர், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்யவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசின் மீது தவறுகளைத் திருப்புவதா?
ஒரு சம்பவம் நடக்கிறது. சமூக வலைதளத்தில் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், அரசின் மீது தவறுகளைத் திருப்பி விடுகின்றனர். இதை ஊடகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.’’
இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.