நமது இந்திய முப்படை வீரர்களுக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட ஆசிரியர்கள் , மாணவர்கள் & தேசிய மாணவர்படை மாணவர்களின் சார்பில் நமது அன்பும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இப்போது 2023ல் ஏழாவது ஆண்டாக ராக்கி (சகோதரத்துவ கயிறுகளை) அன்புடன் தயாரித்த ராக்கி கயிறுகள் கரூர் பரணி பார்க் குழும பரணி கல்வி வளாகத்தில் இருந்து புதுதில்லி ராணுவ தலைமையகத்திற்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முனைவர் ராமசுப்பிரமணியன் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வரும் பரணி கல்விக் குழும ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்விற்கு கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர்.மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி முன்னிலை வகித்தனர்.


 




பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் பேரில் பரணி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருக்குறள் எண் 766ஐ தமிழ், ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, அசாமி, குஜாராத்தி, பெங்காலி, சந்தாளி, கொங்கணி, ஒடியா, நேபாளி, சிந்தி உள்ளிட்ட 18 இந்திய மொழிகளில் மொழிப் பெயர்த்த திருக்குறள் ராக்கி கயிறுகள் 1,60,000ம் பிற ராக்கி கயிறுகள் 50,000ம் ஆக மொத்தம் 2,10,000 ராக்கி கயிறுகள் இந்திய இராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டது. ராணுவ வீரர்களுக்கான ராக்கிகளை ஒருங்கிணைக்கும் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், "நாம் அனைவரும் நமது நாட்டின் முப்படைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நமது வீரர்கள் இல்லாமல் நாம் ஒருபோதும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியாது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது. கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ  வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம். 2017 இல் 15000 ராக்கிகள், 2018 இல் 16000 ராக்கிகள், 2019 இல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020 & 2021 இல் ஒவ்வொரு ஆண்டும் 25000 ராக்கிகள் அனுப்பப்பட்டன (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன). கடந்த  2022 ஆம் ஆண்டு 1,50,000 ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து  2,10,000 ராக்கிகளை தயார் செய்து அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.


 




 


இந்நிகழ்வில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர்  பிரியா, பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு, பரணி வித்யாலயா தேசிய மாணவர் படை அலுவலர் மனோஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏழாவது ஆண்டாக பரணி பார்க் கல்விக் குழுமம் சார்பாக முப்படை  வீரர்களுக்கு 2,10,000 ராக்கி அனுப்பி வைக்கும் நிகழ்வில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன், அறங்காவலர்  சுபாஷினி, பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் மற்றும் பலர்.