தவெக தலைவரும் நடிகருமான விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், மொட்டை மாடியில் ஒளிந்து இருந்துள்ளார். இவர் ஒருநாள் முழுவதும் அங்கேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை, நீலாங்கரை பகுதியில் தவெக தலைவர் விஜயின் வீடு உள்ளது. இவருக்கு காவல் துறை, மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு ஆகியவற்றுடன் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் விஜயின் ரசிகர்கள் அவரைக் காணவும் கட்டிப் பிடிக்கவும் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்வது வழக்கம்.
விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்
இந்த நிலையில், பலத்த பாதுகாப்பையும் கட்டுக் காவலையும் மீறி இளைஞர் ஒருவர் விஜய் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். தொடர்ந்து விஜயைச் சந்திப்பதற்காக, மொட்டை மாடிக்குச் சென்று, ஒரு நாள் முழுவதும் மறைந்துள்ளார். உணவு, தண்ணீர் இன்றி அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.
நடைப் பயிற்சிக்காக மொட்டை மாடிக்குச் சென்ற விஜய்
இதற்கிடையே விஜய் நேற்று மாலை நடைப் பயிற்சிக்காக மொட்டை மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இளைஞரைப் பார்த்த விஜய், அவரிடம் பொறுமையாகப் பேசி கீழே அழைத்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் பேசும்போது, இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்துகொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யார் அந்த இளைஞர்?
பிடிபட்ட இளைஞரிடம் நீலாங்கரை போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்துள்ளது. அவர் நான்கு ஆண்டுகளாக சற்றே மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். பலகட்டப் பாதுகாப்பை மீறி அந்த இளைஞர், விஜய் வீட்டுக்குள் நுழைந்தது குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.