தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. பிப்ரவரி 15ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் கூறியிருந்தது.


இந்த நிலையில், கனமழை காரணமாக திருவாரூர், நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


மேலும், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேர்வு நடைபெறும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.


இதனிடையே, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர், விளமல், மாங்குடி, மாவூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 11செமீ மழை பதிவாகியுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண