தமிழ்நாட்டில் டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது அதனை பற்றி இங்கு காணலாம்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அதன்படி வெளியிடப்பட்டிள்ள அறிவிப்பில், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், ஆர்எஸ் மங்கலம், திருவாடானை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக அரசு நாட்காட்டிப்படி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்ற நிலையில் மழையின் காரணமாக வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டதால் அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 29ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருந்தது. இதற்கிடையில் மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 28) அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அளித்த விளக்கத்தில், மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறையை முடிவு செய்யலாம் என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் மழையின் அளவை கண்காணித்து அதற்கேற்ப தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டிட்வா புயலின் நிலை என்ன?
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, “ இலங்கையின் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான சூறாவளி புயல் டிட்வா கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று (நவம்பர் 28) அன்று இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டது.
இந்த புயலானது இலங்கையின் திரிகோணமலைக்கு வடமேற்கே சுமார் 70 கிமீ, இலங்கை மட்டக்களப்பிலிருந்து 170 கிமீ வடமேற்கே, புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலிலிருந்து 240 கிமீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 350 கிமீ தென்-தென்கிழக்கே மற்றும் தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து 450 கிமீ தெற்கே உள்ளது. இது இலங்கையின் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சனிக்கிழமை என்ற நிலையில் மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டபோது, பள்ளி நிர்வாகம் எக்காரணம் கொண்டும் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.