Save Soil : வேளாண் சார் தொழில் கனவுகளுக்கு கைக்கொடுக்கும் அரசுத் திட்டங்கள்!


மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் விரிவாக விளக்குகிறார் TNAU ஏ.வி. ஞானசம்பந்தம்
 
கனவு மெய்ப்பட வேண்டும் என்றார் பாரதியார். கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம். முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கனவுகள் காண்பதும், இலக்குகள் நிர்ணயிப்பதும் இயல்பு. அந்த வகையில் மக்களின் வேளாண் சார்ந்த தொழில் கனவுகள் நிறைவேற ஓர் அற்புத களத்தை உருவாக்கியுள்ளது ஈஷா மண் காப்போம் இயக்கம். இவ்வியக்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று கோவையில் “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா நடைபெறுகிறது. 


புதிதாக வேளாண் சார் தொழில் தொடங்குபவர்களுக்கு தங்கள் துவங்கப் போகும் தொழில் சார்ந்த தெளிவான பார்வை இருந்தாலும் கூட அதை நடைமுறைப் படுத்தும் போது பல சந்தேகங்கள் எழும். ஒரு தொழிலை முறையாக எப்படி பதிவு செய்வது என்பது தொடங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரையில் இருக்கும் அரசு நடைமுறைகள் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் அரசுத் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கும். அதே போன்று வேளாண் சார் தொழிலில் அரசு மானியங்களை பெரும் வழிமுறைகள் குறித்தும் தெளிவான தகவல்கள் தேவைப்படும்.


இது அனைத்திற்கும் தீர்வளிக்கும் வகையில் TNAU தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலர் அலுவலர் திரு.ஏ.வி. ஞான சம்பந்தம் அவர்கள் “வேளாணில் வணிக வாய்ப்புகள்” என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். 
 
இதில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேச உள்ளார். TNAU வில் செயல்படும் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் வேளாண் சார் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


வேளாண் சார் தொழில்களுக்கு அத்தியாவசியமான தொழிநுட்ப வழிகாட்டுதல்கள், வணிக மேலாண்மை பயிற்சிகள், சந்தை வாய்ப்புகள், தேசிய அளவிலான கண்காட்சிகள், வங்கி மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பு ஆகிய பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. 


தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.


“மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை R-ABI திட்டம்” இத்திட்டத்தின் கீழ் இளம் பட்டதாரிகளுக்கு வேளாண் வணிக பயிற்சியும் (AOP), துளிர் நிறுவனத்  தொழில் முனைவோருக்கான வேளாண் வணிகப் பயிற்சியும் (SAIP) வழங்கப்படுகிறது. 


மேலும் NIDHI-EIR திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் புதிய வணிக யோசனையுடைய பட்டதாரிகளுக்கு அவர்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் வணிக யோசனை ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரையிலான நிதியுதவியுடன் கூடிய தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சி 12 மாதத்திற்கு அளிக்கப்படுகிறது. 


இது தவிர்த்து தொழில் முனைவோர்களுக்கான ஆரம்ப மூலதன திட்டத்தின்(SISFS) கீழ் ஆரம்ப நிலை தொழில் முனைவோர்களுக்கு  வணிக கருத்தின் ஆதாரம் காண்பித்தல் முன்மாதிரி உருவாக்குதல் தயாரிப்புகளுக்கான சோதனைகள் ஆகியவற்றிற்கு ரூ. 20 இலட்சம் வரை மானிய வாய்ப்பு உள்ளது.  


மேலும்  NIDHI-PRAYAS திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் அதனை சார்ந்த புதிய சிந்தனைகளை கொண்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கும் ரூ.10 இலட்சம் வரையிலான தொகையை மானியமாக வழங்க கூடிய வாய்ப்பு இத்திட்டத்தில் உண்டு. இது தவிர்த்து இன்னும் ஏராளமான திட்டங்களை, செயல்பாடுகளை இந்த தொழில் நுட்ப வணிக காப்பகம் முன்னெடுத்து வருகிறது. 


திரு. ஞான சம்பந்தம் அவர்கள் இத்திட்டங்கள் குறித்தும் இவற்றை எப்படி பெறுவது என்பது குறித்தும் விரிவான தகவல்களை இந்த அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். 


விவசாயிகள் மற்றும் வேளாண் சார் தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் விவசாயியாக இருந்து தொழில் முனைவோராக ஜெயித்த பல முன்னனி தொழிலதிபர்கள், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கிறார்கள். மேலும் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுவது எப்படி, அதை பேக் மற்றும் பிராண்டிங் செய்வது, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி என அனைத்து அம்சங்களிலிலும் வழிகாட்ட வேளாண் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள்.


இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.