சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும், சார்பு ஆய்வாளர்  ரகு கணேஷ் ஜாமின் கோரி  உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம். வழக்கை ஆறு மாதங்களுக்குள் கீழமை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மீண்டும் கால அவகாசம் வழங்கி ஓராண்டு ஆகிவிட்டது. 20 மாதங்களுக்கும் மேலாக, நீதிமன்ற  காவலில்  சிறையில்  வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார். 

 



 

இந்த மனு நீதிபதிமுரளி சங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.  உயிரிழந்த ஜெயராஜின் மனைவி இந்த வழக்கில், தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க கோரினார். சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்" இந்த சூழலில், ஜாமின் வழங்கினால், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமின் வழங்கக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து நீதிபதி, ஜெயராஜின் மனைவி தரப்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 




 

தனியார் விடுதியில் அத்துமீறி நுழைந்து விடுதி பொருள்களை சேதப்படுத்திய வழக்கில் வழக்கறிஞருக்கு ஓராண்டு சிறை  

 

மதுரை பைபாஸ் ரோட்டில் ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளது. இவருக்கும் வக்கீல் கார்மேகம் என்பவருக்கும் இடையே மாடக்குளத்திலுள்ள ஒரு இடத்தின் உரிமை தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த 2015ல், ஹோட்டலை கிரானைட் கற்களால் அழகுபடுத்தும் பணி நடந்தபோது, ஹோட்டலுக்குள் வந்த கார்மேகம் கிரானைட் கற்களை கீழே தள்ளிவிட்டு உடைத்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கார்மேகம் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கின் விசாரணை மதுரை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி என்.நாகலட்சுமி தீர்ப்பளித்தார். அதில் அத்துமீறி நுழைதல் மற்றும் இழப்பை ஏற்படுத்துதல் ஆகிய குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப் பட்டதால் வழக்கறிஞர் பார்கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது