செம்மரக்கடத்தல் வழக்கு:


சென்னை அண்ணா நகரில், சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வசித்து வருகிறார். இவர் மரப்பொருட்களால் ஆன பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக,  ஆந்திர போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டர். அதையடுத்து நீதிமன்றத்தை அணுகி ஜாமீனில் வெளிவந்தார்.


செம்மரக்கடத்தல் பறிமுதல்:


அதைதொடர்ந்து, கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பாஸ்கரனின் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக நேற்று இரவு பாஸ்கரன் வீட்டில் இருந்து அவரை அழைத்து சென்ற மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்,  தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குநரகத்தில் வைத்து  தீவிர விசாரணை நடத்தினர்.


சசிகலாவின் உறவினர் கைது:


பல மணி நேரம் நீடித்த விசாரணையின் முடிவில், பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திராவில் அவ்வப்போது  தமிழர்கள் கைது செய்யப்படும் நிலையில், தற்போது சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சசிகலாவிற்கு தொடர்ந்து பின்னடைவு:


சசிகலா என்ற பெயர் தமிழக அரசியலில் பல ஆண்டு காலமாகவே பேசப்படும் பெயராக உள்ளது. ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த சசிகலா அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆசைப்பட்டார். அந்த ஆசை பாதியிலேயே நிராசையாகிப் போனது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று நான்கு ஆண்டுகள் கழித்து வந்த சசிகலா அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு பெரிய அளவில் எதுவும் செய்யலாம் அமைதி காத்த சசிகலா 2022ஆம் ஆண்டில் ஆன்மீக பயணத்தில் ஆரம்பித்து அரசியல் பயணத்தில் முடித்தார். அதிலும் பெரிய தாக்கம் ஏற்படாத நிலையில், முறைகேடாக சொத்துக் குவித்ததாக அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அவரது உறவினரும் கைது செய்யப்பட்டு இருப்பது, சசிகலாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.