செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது என சசிகலா எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement


சிறுப்பிள்ளைத்தனம்:


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்த செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள செயல் சிறுபிள்ளைத்தனமானது. முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையனின் பதவி பறிப்பு என்பது அறிவார்ந்த செயல் கிடையாது.


அதிமுக – ஒரு மாபெரும் இயக்கம்


“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். எம்ஜிஆர் மற்றும் அம்மா ஆகியோர் இந்த கட்சியை யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு வைத்தனர். அம்மாவின் புண்ணியத்தால், நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் பொறாமைப்படும் அளவுக்கு கழகத்தின் செயல்பாடு அமைந்து இருந்தது.


நம் இருபெரும் தலைவர்களும் ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் இயக்கத்தை நடத்தி வந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.


எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சவால்கள்


எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு நம் கட்சி சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அன்றைக்கு அதிமுகவிற்கு, இனி எதிர்காலம் இல்லை, அதிமுகவின் கதை முடிந்துவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் இதே கனவோடு தான் அன்றைக்கு இருந்தார். ஆனால் என்ன நடந்தது? கருணாநிதி கண்ட கனவை மொத்தமாக கலைத்தோம்.


பிளவை ஒற்றுமையாக மாற்றிய கலை


இது நம்மால் எப்படி சாத்தியப்பட்டது? ஒரு பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை, அன்றே நான் தெளிவாக கற்றுக்கொண்டு விட்டேன். அதாவது, இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்த பிறகு, அனைவரையும் நம் கட்சிக்காரர் என்று மட்டும் தான் பார்த்தோமே தவிர, இவர் இந்த அணியைச் சேர்ந்தவர், அவர் அந்த அணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் வேற்றுமைப்படுத்தி ஒரு நாளும் பிரித்து பார்த்ததில்லை. இதை நாங்கள் கற்றுக்கொண்டது எம்.ஜி.ஆரிடம்தான்.


எம்.ஜி.ஆர் அனைத்தையும் கற்று தேர்ந்தவர். ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெரியாது. அது என்னவென்றால், யாரையும் பிரித்து பார்க்கமாட்டார். அனைவரையும் சமமாகவே பார்ப்பார். யாரையும் துண்டாடமாட்டார். இதைத்தான் நாங்கள் அன்றைக்கு கடைப்பிடித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.


திமுகக்கு இடம் கொடுக்கக்கூடாது


திமுக கட்சியை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு நாமே அவர்களுக்கு இடம் அளித்துவிடக்கூடாது. மேலும், திமுகவினரின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகிடாமல், கட்சி நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நமது ஒவ்வொரு செயல்களும் இருக்க வேண்டும்.


அதிமுகவின் உண்மையான அடையாளம்


அவர்கள்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான இரத்தத்தின் இரத்தங்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இது தான் நமது இருபெரும் தலைவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் ஆகும் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து; சிறுசா இருக்கையில் திருத்திக்கோ; தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ" என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கேற்ப யாராக இருந்தாலும், தாங்கள் செய்கின்ற தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒற்றுமையின் அவசியம்


எம்.ஜி.ஆரையும், அம்மாவையும் தங்களுடைய தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களது கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒவ்வொரு தொண்டரும் நம் கட்சிக்கு சொந்தக்காரர்கள் தான். அவர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிந்து நின்றாலும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பதுதான்.


தேர்தல் இலக்கு – ஆட்சிமாற்றம்


தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு. எனவே, அனைவரையும் ஒன்று படுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவும், தமிழகத்தில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்பி, தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றிடவும் விரைவில் அனைவரும் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.